A Tribute to Prof. S. Balakumar

அறிவாற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க கல்வியலாளன்
அமரர் பேராசிரியர் சந்திரசேகரம்பிள்ளை பாலகுமார்

பேராசிரியர் ச. பாலகுமார் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் பல்வகைகளில் ஒரு தனித்துவமான மனிதர் ஆவார். முற்றுமுழுதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான கல்வியியலாளன் எனும் பெருமைக்குரியவர். நவிண்டில் நெல்லியடியைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் 1969.07.29 அன்று அமரர்களான திரு. சந்திரசேகரம்பிள்ளை திருமதி. ராஜேஸ்வரி சந்திரசேகரம்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனாக மண்ணில் அவதரித்தார். அவருக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் வாய்க்கப்பெற்றனர். இயல்பாகவே ஆன்மீகநாட்டமும் இறை நம்பிக்கையும் கொண்ட குடும்பப் பின்னணி பேராசிரியர் அவர்களையும் அவ்வாறே வாழ்வித்தது. ஈற்றில் அவரது வாழ்வும் இறைசந்நிதான நிழலிலேயே நிறைவுற்றமையையும் நினைவில் நிறையும் இயற்கையின் நியதியாகும்.

தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் தாமோதர வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று உயிரியல் விஞ்ஞானப் பட்டக்கற்கைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டதாரி மாணவனாக இணைந்த அவரது தொடர்பு பின்னர் விஞ்ஞான முதுமாணி மாணவன், கலாநிதிப்பட்ட ஆய்வாளன் எனப் பரிமாணம் பெற்றதுடன் உதவி விரிவுரையாளர், சிரேஸ்ட விரிவுரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர், பீடாதிபதி, பதில் துணைவேந்தர் என தொழில்சார்ந்தும் விரிந்து சென்றது.

பேராசிரியர் ச. பாலகுமார் அவர்கள் விலங்கியலில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை நிறைவுசெய்த பின்னர் உயிர் இரசாயனவியல் துறையில் முதுமானிப்பட்டத்தையும் அதே துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். அவர் தனது கலாநிதிப் பட்ட ஆய்வை மறைந்த உயிர் இரசாயனவியல்துறை வாழ்நாள் பேராசிரியர் க. பாலசுப்பிரமணியம் மற்றும் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொண்டமை சிறப்புக்குரிய விடயமாகும்.

01.11.2001 இருந்து 30.03.2003 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உயிர் இரசாயனவியல் துறையில் ஒப்பந்த  அடிப்படையில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்து கொண்ட அவர் 03.03.2003 ஆம் ஆண்டு நிரந்தர சிரேஷ்ட விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். தொழில்வாழ்வில் படிப்படியாக முன்னேறிய அவர் 2019 ஆம் ஆண்டு திறமை அடிப்படையில் உயிர் இரசாயனவியல் துறையின் பேராசிரியராக உயர்வு பெற்றார்.

தனது தொழில்வாழ்க்கைக் காலத்தின் போது ஒரு பல்கலைக்கழக ஆசிரியனுக்கு விதிக்கப்பட்ட முப்பெரும் பணிகளான கற்பித்தல், ஆய்வு, கல்வி நிர்வாகம் எனும் தளங்களில் தனது தனித்துவ ஆற்றலினாலும் விசேடித்த குணாம்சங்களினாலும் காலக்கனதிமிக்க பல வரலாற்றுக் கடமைகளை ஆற்றியவர் பேராசிரியர் பாலகுமார் அவர்கள்.

உயிர் இரசாயனவியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர் தனது இறுதிக்கணம் வரை அந்தப் பதவியைத் தொடர்ந்த வண்ணமிருந்தார். 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஒன்பதாவது பீடாதிபதியாக போட்டியின்றி ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

மருத்துவபீடத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றிய காலத்தில் பீடத்தின் வளர்ச்சிக்குப் பல்வேறு வழிகளிலும் தன் பங்களிப்பை நல்கினார். குறிப்பாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நிறைவுறாது இருந்த மருத்துவபீட கூவர் கலையரங்கத்தின் நிர்மாணிப்பு வேலைகளை நிறைவுறுத்தியது மட்டுமன்றி நவீன வசதிகளுடன் மாணவர் பாவனைக்காக கையளித்தார்.

Opening of Hoover Auditorium

அத்துடன் பரீட்சை மண்டபம், இணைசுகாதாரக் கற்கைகளுக்கான புதிய கட்டடத் தொகுதி நிர்மாணம், உயிர் இரசாயனவியல்துறை ஆய்வுகூட புனரமைப்பு, மருத்துவபீட பேராசிரியியல் துறைகளுக்கான எட்டு மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் கட்டடத்துக்காக காணியை அரச நன்கொடையாக பெற்று கட்ட பணிகளை ஆரம்பித்தமை (கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இடவசதியற்ற), மருத்துவபீடத்துக்கு அருகாமையில் பீடத்துக்காக காணி கொள்வனவு, பழைய மாணவர்களின் அனுசரணையில் மருத்துவபீட மாணவர் விடுதி விஸ்தரிப்புக்காக காணி கொள்வனவு, நன்கொடை அடிப்படையில் கொக்குவிலில் மருத்துவபீடப் பாவனைக்கென காணி பெற்றமை, பீடத்தின் உள்ளகச் சூழலை மீளவும் புதுப்பொலிவுடன் அழகுபடுத்தியமை என தனது அர்ப்பணிப்புமிக்க சேவையில் பல பெறுமதியான அடையாளங்களைப் பொறித்தார் அது மட்டுமன்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் (JUICE) மருத்துவ பீட இணைப்பாளராக 2008 ஆம் ஆண்டு பொறுப்பேற்று மிகச் சிறப்பாக நடத்தினார். அது மட்டுமன்றி இணை மருத்துவ விஞ்ஞான அலகினை பீடமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

தனது தொழில் வாழ்வின் ஆரம்பநாள்களில் உலக வங்கியின் நிதி அனுசரணையில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அமுல்படுத்தப்பட்ட IRQUE திட்டத்தின் இணைப்பாளராக இருந்து பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த நிதியை வினைத்திறனாகப் பாவித்தது மட்டுமன்றி மருத்துவ மாணவர்களின் கல்வித்தேவைக்கென புதிய பேரூந்து ஒன்றையும் மருத்துவபீட கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான பன்னிரண்டு இருக்கைகளுடனான நிசான் வாகனம் ஒன்றினையும் கொள்வனவு செய்ததுடன் மட்டுமன்றி அவற்றை கொழும்பிலிருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். உயிர் இரசாயனவியல் துறை சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் பெற்றுக்கொள்ளப்பட்ட திட்டத்தின் பிரகாரம் 2009 ஆம் ஆண்டு சுவீடன் தேசத்துக்குச் சென்று தனது ஆய்வு அனுபவ த்தினை மேலும் மெருகூட்ட பல புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டார்.

கற்பித்தலில் எப்போதும் புதுமைகளைப் புகுத்தும் விருப்புக் கொண்ட பேராசிரியர் பாலகுமார் அவர்கள் ஒரு கண்டிப்பும் கனிவும் மிக்க ஆசிரியராக தனது மாணவர்களால் அடையாளப்படுத்தப்பட்டார். புதிய தொழில்நுட்பங்களைக் கற்பித்தலுக்குத் துணைக்கொள்வதில் என்றும் ஆர்வத்துடன் செயற்பட்ட அவர்; பல நவீன கற்றல் கற்பித்தல் உபகரணங்களை மருத்துவபீடம் கொள்வனவு செய்வதற்கு துணைநின்றார். மாணவர்களின் தனிப்பட்ட நலன்களில் அக்கறையுடன் செயற்பட்ட அவர் பல ஆண்டுகளாக மாணவர் ஆலோசகராக தனது பங்களிப்பை நல்கிவந்தார். மாணவர்கள் நலனில் அக்கறையுடன் இருந்த அதேவேளை எக் காரணத்துக்காகவும் அவர்களது கற்றல் கடமைகளில் எந்தச் சந்தர்பத்திலும் சமரசங்ளைச் செய்துகொள்ள அவர் முன்வந்ததில்லை என்பது தனது மாணவர்கள் ஆழக் கற்றல் அவசியத்தில் அவர் கொண்டிருந்த அக்கறையை வெளிப்படுத்துகின்றது. உயிர் இரசாயனவியல் துறையில் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதிப்பட்ட ஆய்வு மாணவர்கள் பலரின் மேற்பார்வையாளராகவும் பரீட்சகராகவும் கடமையாற்றிய பேராசிரியர் அவர்கள் பல துறைசார் விற்பன்னர்களை அத் துறையில் உருவாக்கினார். 

எவ்வாறு தனது தொழில் வாழ்வை அதிகமாக நேசித்தாரோ அதேயளவுக்கு குறைவின்றி தனது குடும்பத்தினர் நலனிலும் அக்கறையுடனிருந்தார். தனது சகோதரர்களின் வளர்ச்சியிலும் அவர்களது பிள்ளைகளின் நலனிலும் அதீத அக்கறையுடனிருந்த அவர் அவர்களுக்காகவே தனது வாழ்வை தியாகம் செய்தார். பரம்பரை பரம்பரை ரீதியாகத் தனக்கு விதிக்கப்பட்ட சமய மற்றும் சமூகக் கடமைகளையும் தவறின்றி நிறைவேற்றி வந்த அவர் அவ் விடயங்களில் பிறர் இழைக்கும் தவறுகள் கண்டு அறச்சீற்றம் கொண்டவராகவிருந்தார். அவ்வியல்பே அவரது இவ்வுலக வாழ்வையும் நிறைவுறுத்தும் காரணியாகியது காலக்கொடுமையாகும்.

இயல்பாகவே தமிழ்த் தேசிய உணர்வுமிக்க அவர் அதனைப் பகிரங்க வெளிகளில் வெளிக்காட்டாவிட்டாலும் தன்னால் இயன்ற பங்களிப்பை தமிழ்த் தேசியத்துக்காக நல்கிவந்தார். அமரர் அவர்கள் பீடாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் 2012 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் மருத்துவபீட மாணவர் ஒன்றியத் தலைவர் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டபோது அவரை மீட்பதற்காக பல தரப்புக்களையும் சந்தித்து அதில் துரித வெற்றியும் கண்டார்.

பேராசிரியர் அவர்கள் இயல்பில் கலை இரசனைமிக்க ஒருவராகாகவிருந்தார். குறிப்பாக கம்பன் கழகம் மற்றும் தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் அவரது பெறுமதி கருதி வழங்கப்படும் அழைப்புக்களுக்கு மதிப்புக் கொடுத்து முன்வரிசையில் அமர்ந்திருந்து கலைநிகழ்வுகளை தன்னை மறந்து ரசித்து மகிழ்வது அவரை நன்கு அறிந்தோருக்கு தெரிந்தவிடயமாகும். இந்த கலைரசிகத்தன்மையை அவர் மருத்துவபீடத்திலும் காண்பித்தார். அவர் பீடாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் மருத்துவபீட அபிவிருத்திக்கு நிதி சேகரிப்பதற்கு மருத்துவ மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் கலைநிகழ்வொன்றை 2013 ஆம் ஆண்டு கூவர் கலையரங்கில் நிகழ்த்தியமை சிறப்புக்குரியது. மாணவர்கள் இளமைத் துடிப்புடன் குறும்புத்தனமாக செய்யும் கலைப் படைப்புக்களையும் பெருந்தன்மையுடன் ஏற்று அவர்களை வழிப்படுத்தும் வாண்மையும் அமரரிடம் வாய்க்கப்பெற்றிருந்தது.

தனக்கு ஒவ்வாத விடயங்களைக் கண்டு அதற்கு உடனடி எதிர்வினைகளை ஆற்றுவது பேராசிரியரின் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது. எத்தகைய எதிர்வினைகளை ஆற்றினாலும் மற்றவர் மனம் நோகும் போது இளகிய மனத்துடன் அவர்களை அணுகும் இயல்பும் அவரிடம் சமாந்தரமாக வாய்த்திருந்தது. மனஎழுச்சி நுண்ணறிவில் ஒரு கூட்டுக்கலவையாகவே அவர் மற்றவர்களால் மதிக்கப்பட்டார். இவ்வாறு பல பரிமாணம் கொண்ட பேராசிரியர் ச. பாலகுமார் அவர்கள் 13.04.2022 அன்று மாலை 5.00 மணியளவில் மாரடைப்பினால் உயிர்துறந்த செய்தி அவருக்கு அணுக்கமான பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது உடல் உள ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடனிருந்த ஒருவருக்கு இத்தகைய முடிவு நிகழ்ந்தபோது மருத்துவ நண்பர்கள் உள்ளிட்ட பலரும் திகைப்புற்றனர்.

அமரரது வாழ்வு மற்றவர்களுக்கு பல வழிகளிலும் முன்னுதாரணமான வாழ்வு. அவரது தடங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எப்போதுமிருக்கும். மருத்துவபீடத்தில் அவரது பிரசன்னம் ஆத்ம நிலையிலும் நிலைத்திருக்கும். உயிர் இரசாயனவியல் துறையில் அவர் உணர்வுகள் என்றும் செறிந்திருக்கும். அமரத்துவ வாழ்வு பெற்ற பேராசிரியர் பெருமை என்றும் நிலைக்கப் பிரார்த்திப்போம்.